Monday, February 8, 2010

கடல் விமானம்

நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர் நிலைகளில் தரையிறங்கக் கூடியதும் நீர்நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை விமானங்கள் பொதுவாக இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.

மிதவை விமானங்கள் (float planes)
பறக்கும் படகுகள் (flying boats)
இவ்விருவகை விமானங்களும் நீர்நிலைகளில் தரையிறங்கி மேலெழக்கூடிய தன்மையினைக் கொண்டிருந்த போதிலும் அவையிரண்டும் அவற்றின் உடலமைப்பில் வித்தியாசப்படுகின்றன. மிதவை விமானங்கள் சாதாரண விமானங்களையொத்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் சக்கரங்களுக்குப் பதிலாக, நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் மிதவை அமைப்புக்கள் காணப்படும். பொதுவாகச் சிறியவகைக் கடல் விமானங்களே இவ்வகைக்குள் அடங்குகின்றன. பறக்கும் படகுகள் வகை விமானங்களில் அவற்றின் உடலின் கீழ்ப்பகுதி நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் படகு ஒன்றின் கீழ்ப்பகுதியை ஒத்ததாகக் காணப்படும். பாரிய கடல்விமானங்கள் அனைத்தும் இவ்வகையினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தபோதிலும் இவ்வகைக் கடல்விமானங்களினும் சிறியரகக் கடல்விமானங்களும் காணப்படுகின்றன.

கடல் விமானங்கள் நீர்நிலைகளில் மட்டுமே தரையிறங்கி மேலெழக்கூடிய வகையில் வடிவமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஈரூடக வான்கலங்கள் (amphibious aircraft) தரை மற்றும் நீர்நிலைகளில் தரையிறங்கி மேலெழக்கூடியவகையில் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அதாவது, ஈரூடக விமானங்களின் உடலின் அடிப்பகுதி நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் படகுபோன்ற அமைப்பில் காணப்படுவதுடன் அவை தரையில் ஓடுவதற்கேற்ற வகையில் சக்கரங்களையும் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பல்வேறு நாட்டுக் கடற்படைகளால் கடல்விமானங்கள் வேவு நடவடிக்கை, மீட்புப்பணி மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கக் கடற்படையினர் கடல் விமானங்களை வேவுப்பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதோடு கனரக இயந்திரத்துப்பாக்கிகள் மற்றும் கடற்தாக்குதற் குண்டுகள் என்பவற்றைப் பொருத்தித் தாக்குதற் தேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.

இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் இவ்வகை விமானங்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்ட போதிலும், பாருக்குப் பின்னான காலப்பகுதியில் இவ்விமானங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நவீன போர்விமானங்களின் அபரிதமான தொழிநுட்ப வளர்ச்சி, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறையில் புகுத்தப்பட்ட புதிய மாற்றீடுகள் மற்றும் தந்திரோபாயங்கள், வேவு நடவடிக்கையில் உலங்கு வானூர்திகளின் இலகுவானதும் விரைவானதுமான பயன்பாடு என்பன, கடல்விமானங்களின் தேவையை இல்லாது செய்தன. அத்துடன் நவீன போர்விமானங்களுடன் ஒப்பிடும்போது, கடல்விமானங்களின் வேகம் (Speed), பறப்புத்தூரம் (Range) என்பனவற்றுடன் அவற்றின் போர்க்கருவிகள் காவுதிறனும் (warloads) குறைவானதாகவே காணப்படுகின்றன.

பொதுவாக கடல்விமானம் ஒன்று நீர்நிலையொன்றிலிருந்து மேலெழும்போது, நீரில் ஓடும்போது நீரினால் ஏற்படுத்தப்படும் தடை, நீரின் மேற்பரப்பு இழுவிசை போன்றவற்றைக் கடந்தே மேலெழவேண்டிய தேவையுள்ளது. இவ்வாறா காரணங்களினால் மேலதிக சக்தித்தேவை தவிர்க்க முடியாததாகின்றது. சாதாரண விமானங்களுக்குத் தேவையற்ற அந்த மேலதிக சக்தித்தேவையைத் தவிர்ப்பதும் கடல்விமானங்களின் பயன்பாடு குறைவடைந்ததற்கு ஒரு பிரதான காரணம் ஆகும். எவ்வாறாயினும், பல்வேறு நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டிலிருந்து கடல் விமானங்களின் பயன்பாடு முற்றுமுழுதாக ஒதுக்கப்பட்டுவிடவில்லை. அத்துடன், தரை ஓடுபாதைகள் அற்றதும், உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த முடியாத தொலைதூரப் பயன்பாடுகளுக்கு கடல் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது தவிர காட்டுத்தீயணைப்பு நடவடிக்கைகளிலும் கடல் விமானங்களின் பயன்பாடு காணப்படுகின்றது. நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்துவரும் செயற்பாட்டினை கடல் விமானத்தால் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதனாலேயே தீயணைப்பு செயற்பாட்டிற்கு இது இலகுவானதாகக் காணப்படுகின்றது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகையொலி வேகத்தாரைக் (super sonic) கடல்விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அமெரிக்கா இம்முயற்சியில் வெற்றியடைந்த போதிலும், அது தன் முயற்சியைத் தயாரிப்புப் பணிகளில் இறங்காது பரிசோதனையுடன் நிறுத்திக்கொண்டது. அமெரிக்காவினாற் பரிசோதிக்கப்பட்டு Convair F2Y Sea Dart என்று பெயரிடப்பட்ட கடல்விமானமே உலகின் ஒரேயொரு வெற்றிகரமான மிகையொலி வேகத்தாரைக் கடல்விமானமாகும் (Supersonic Seaplane).

Saturday, February 6, 2010

Unmanned Aerial Vehicle (ஆளில்லா வானூர்தி)

மனிதர்களின் கட்டுப்பாடு அற்று தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக் கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.










பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த போதிலும், நவீன ஆளில்லா வானூர்திகள் தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு மூலமாகவோ அல்லது முற்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப தன்னியக்கமாகவோ இயக்கப்படுகின்றது.
நவீன இராணுவப் பயன்பாட்டிலுள்ள ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணி மட்டுமல்லாது தாக்குதல் நடாத்தும் திறன்வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவைதவிர இராணுவப் பயன்பாடற்ற செயற்பாடுகளான தீயணைப்பு, பொதுப் பாதுகாப்புச் சேவையினரின் கண்காணிப்புப் பணி போன்றவற்றிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் அவற்றின் பயன்பாட்டுரீதியாக ஆறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

எதிரிப் படைகளின் தரை இலக்குக்களைத் தாக்கியழித்தல் (aerial attack)
சமர்க்கள அவதானிப்புப் பணி (reconnaissance)
வான் யுத்தம் (dog fight)
வான்வழி இராணுவப் போக்குவரத்து
ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணி (research and development)
பொது மற்றும் வர்த்தகப் பணி (civil and commercial purpose)

இவ் ஆறு வகையான ஆளில்லா வானூர்திகளும் அவற்றின் பறப்பு வீச்செல்லை (range), பறப்பு உயரம் (altitude) போன்றவற்றின் அடிப்படையிலும் இவ்வகை வானூர்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பல்வேறுபட்ட ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பாகப் (unmanned aircraft system) பயன்படுத்திவருகின்றது. இவ்வகையான தொகுதிகளிலுள்ள வானூர்திகள் இணைக்கப்பட்ட வலையமைப்பினூடு இணைந்து செயற்படுவதுடன் தரையிலுள்ள துருப்புக்களுடன் தொடர்பைப் பேணி தகவல்களை வழங்குகின்றன. இவ்வகையான ஆளில்லா வானூர்தித் தொகுதிகளின் வலையமைப்பு Tier என்ற சொற்பதத்தினாற் குறிக்கப்படுகின்றது. இராணுவத் திட்டமிடலாளர்கள் தனித்துச் செயற்படும் வானூர்திகளை இவ் வலையமைப்பில் தொழிற்படும் வானூர்திகளிலிருந்து பிரித்தறிய இச் சொற்பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆளில்லா வானூர்தி தொகுதி வலையமைப்பானது பல்வேறுபட்ட வகையான ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும். அகெரிக்க வான்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியன தமக்கெனத் தனித்தனியான ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பைக் கொண்டுள்ளன. இவ்விரு தொகுதியமைப்புக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே இயக்கப்படுகின்றன.

ஆளில்லா வானூர்திகள் பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பொதுவானதும் பெரும்பாலானதுமான பயன்பாடு ஏதோவொரு வகையான அவதானிப்புப் பணியாகவே காணப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் மிகக்குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

அவதானிப்புப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை வானூர்திகள் இராணுவம்சார் அவதானிப்பு நடவடிக்கை, தாவர மற்றும் விலங்குகளின் அவதானிப்பு, கடல்சார் அவதானிப்புப்பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையான பயன்பாட்டிற்காக கட்புல ஒளிப்படக்கருவி (visual light camera), அகச்சிவப்புக்கதிர் ஒளிப்படக்கருவி (infrared camera) மற்றும் ரேடார் அவதானிப்புக் கருவி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. வேறுசில சிறப்புப் பயன்பாட்டிற்காக நுண்ணலை உணரி (microwave sensor) மற்றும் புறஊதாக்கதிர் உணரி (ultraviolet sensor) போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர வளியிற் காணப்படும் நுண்ணுயிர்கள் (microorganism) மற்றும் இராசயணப் பொருட்கள் போன்றவற்றை அவதானிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை வானூர்திகள் உயிரி உணரி (biological sensor) மற்றும் இரசாயண உணரி (chemical sensors) போன்றவற்றைப் பயன்படுத்துகினறன.

தற்காலப் பயன்பாட்டிலிருக்கும் கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் அதிலுள்ள கருவிகள் மூலம் அவதானிக்கும் காட்சிகளை உடனுக்குடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கும். இதன்காரணமாக இவ்வானூர்திகள் எதிரிப்படைகளாற் சுட்டுவீழ்த்தப்பட்டாலும் அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தொலைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஆளில்ல அவதானிப்பு வானூர்திகள் அவதானிக்கும் காட்சிகளையும் தரவுகளையும் அதனுள்ளிருக்கும் பதிவுக்கருவியிற் பதிந்து வைத்துக்கொள்ளும். வானூர்தி தளம் திரும்பியதும் அதனுள்ளிருக்கும் கருவியிற் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தானவையாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளில் இவ்வகை வானூர்திகளின் பயன்பாடு மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. நவீன இராணுவங்களின் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை வானூர்திகள் தரையிலுள்ள பாரிய எதிரித்தளங்களைத் தாக்கியளித்தற் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி தனிமனித இலக்குக்களை அழிக்கும் செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.