நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர் நிலைகளில் தரையிறங்கக் கூடியதும் நீர்நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை விமானங்கள் பொதுவாக இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.
மிதவை விமானங்கள் (float planes)
பறக்கும் படகுகள் (flying boats)
இவ்விருவகை விமானங்களும் நீர்நிலைகளில் தரையிறங்கி மேலெழக்கூடிய தன்மையினைக் கொண்டிருந்த போதிலும் அவையிரண்டும் அவற்றின் உடலமைப்பில் வித்தியாசப்படுகின்றன. மிதவை விமானங்கள் சாதாரண விமானங்களையொத்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் சக்கரங்களுக்குப் பதிலாக, நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் மிதவை அமைப்புக்கள் காணப்படும். பொதுவாகச் சிறியவகைக் கடல் விமானங்களே இவ்வகைக்குள் அடங்குகின்றன. பறக்கும் படகுகள் வகை விமானங்களில் அவற்றின் உடலின் கீழ்ப்பகுதி நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் படகு ஒன்றின் கீழ்ப்பகுதியை ஒத்ததாகக் காணப்படும். பாரிய கடல்விமானங்கள் அனைத்தும் இவ்வகையினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தபோதிலும் இவ்வகைக் கடல்விமானங்களினும் சிறியரகக் கடல்விமானங்களும் காணப்படுகின்றன.
கடல் விமானங்கள் நீர்நிலைகளில் மட்டுமே தரையிறங்கி மேலெழக்கூடிய வகையில் வடிவமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஈரூடக வான்கலங்கள் (amphibious aircraft) தரை மற்றும் நீர்நிலைகளில் தரையிறங்கி மேலெழக்கூடியவகையில் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அதாவது, ஈரூடக விமானங்களின் உடலின் அடிப்பகுதி நீரில் மிதப்பதற்கு ஏற்றவகையில் படகுபோன்ற அமைப்பில் காணப்படுவதுடன் அவை தரையில் ஓடுவதற்கேற்ற வகையில் சக்கரங்களையும் கொண்டிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பல்வேறு நாட்டுக் கடற்படைகளால் கடல்விமானங்கள் வேவு நடவடிக்கை, மீட்புப்பணி மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கக் கடற்படையினர் கடல் விமானங்களை வேவுப்பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதோடு கனரக இயந்திரத்துப்பாக்கிகள் மற்றும் கடற்தாக்குதற் குண்டுகள் என்பவற்றைப் பொருத்தித் தாக்குதற் தேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.
இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் இவ்வகை விமானங்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்ட போதிலும், பாருக்குப் பின்னான காலப்பகுதியில் இவ்விமானங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நவீன போர்விமானங்களின் அபரிதமான தொழிநுட்ப வளர்ச்சி, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறையில் புகுத்தப்பட்ட புதிய மாற்றீடுகள் மற்றும் தந்திரோபாயங்கள், வேவு நடவடிக்கையில் உலங்கு வானூர்திகளின் இலகுவானதும் விரைவானதுமான பயன்பாடு என்பன, கடல்விமானங்களின் தேவையை இல்லாது செய்தன. அத்துடன் நவீன போர்விமானங்களுடன் ஒப்பிடும்போது, கடல்விமானங்களின் வேகம் (Speed), பறப்புத்தூரம் (Range) என்பனவற்றுடன் அவற்றின் போர்க்கருவிகள் காவுதிறனும் (warloads) குறைவானதாகவே காணப்படுகின்றன.
பொதுவாக கடல்விமானம் ஒன்று நீர்நிலையொன்றிலிருந்து மேலெழும்போது, நீரில் ஓடும்போது நீரினால் ஏற்படுத்தப்படும் தடை, நீரின் மேற்பரப்பு இழுவிசை போன்றவற்றைக் கடந்தே மேலெழவேண்டிய தேவையுள்ளது. இவ்வாறா காரணங்களினால் மேலதிக சக்தித்தேவை தவிர்க்க முடியாததாகின்றது. சாதாரண விமானங்களுக்குத் தேவையற்ற அந்த மேலதிக சக்தித்தேவையைத் தவிர்ப்பதும் கடல்விமானங்களின் பயன்பாடு குறைவடைந்ததற்கு ஒரு பிரதான காரணம் ஆகும். எவ்வாறாயினும், பல்வேறு நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டிலிருந்து கடல் விமானங்களின் பயன்பாடு முற்றுமுழுதாக ஒதுக்கப்பட்டுவிடவில்லை. அத்துடன், தரை ஓடுபாதைகள் அற்றதும், உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த முடியாத தொலைதூரப் பயன்பாடுகளுக்கு கடல் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது தவிர காட்டுத்தீயணைப்பு நடவடிக்கைகளிலும் கடல் விமானங்களின் பயன்பாடு காணப்படுகின்றது. நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்துவரும் செயற்பாட்டினை கடல் விமானத்தால் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதனாலேயே தீயணைப்பு செயற்பாட்டிற்கு இது இலகுவானதாகக் காணப்படுகின்றது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகையொலி வேகத்தாரைக் (super sonic) கடல்விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அமெரிக்கா இம்முயற்சியில் வெற்றியடைந்த போதிலும், அது தன் முயற்சியைத் தயாரிப்புப் பணிகளில் இறங்காது பரிசோதனையுடன் நிறுத்திக்கொண்டது. அமெரிக்காவினாற் பரிசோதிக்கப்பட்டு Convair F2Y Sea Dart என்று பெயரிடப்பட்ட கடல்விமானமே உலகின் ஒரேயொரு வெற்றிகரமான மிகையொலி வேகத்தாரைக் கடல்விமானமாகும் (Supersonic Seaplane).