Tuesday, November 16, 2010

பல்கலைக்கழக நெருக்கடியும் அரசின் அணுகுமுறையும்

பல்கலைக்கழகக் கல்வியில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சமீபகாலமாக பேசப்பட்டுவருகின்றது. அவ்வாறானதொரு மாற்றம் தேவையானதுதான் என்பதை இன்று நாடு உணரத் தலைப்பட்டுள்ளது. அவ்வாறான மாற்றம் பலாத்காரமாக ஏற்படக்கூடாது. பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடனேயே அதனைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் அதனூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போதனாசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கும் கிட்டக்கூடிய பலாபலன், நன்மைகள் பற்றி எடுத்து விளக்கப்பட வேண்டும். அதோடு நின்றுவிடாமல் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கோ, பெற்றோர்களுக்கோ, பல்கலைக்கழக கல்விமான்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படாமல் இதுவிடயத்தில் அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படமுனைவதால் தான் கடந்துபோன நாட்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளால் அது அரசியல்மயப்படுத்தப்பட்டதோடு அதன் தாக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சிறையிலடைக்கப்படும் நிலை கூட ஏற்பட்டது. மக்களுக்குத் தெரிவிக்கப்படாத மறைமுகமாக எடுக்கப்பட்ட முடிவொன்று காரணமாக விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன.
கடந்துபோன நீண்டகாலத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது பல்கலைக்கழகங்கள் சாதித்த சமூகச் செயற்பாடுகள் இன்று மாற்றம் கண்டுள்ளது. அன்று 8ஆம் வகுப்பு சித்தியடைந்திருந்தால் அது பாடசாலை ஆசிரியராக வரும் தகுதியாகக் காணப்பட்டது. அன்று பல்கலைக்கழகக் கல்வி உயர்கல்விமான்களை நாட்டுக்குத் தரும் நிறுவனமாகவே காணப்பட்டது. இன்று பாடசாலை ஆசிரியராக வருவதற்கு பல்கலைக்கழகப் பட்டம் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எட்டாம் வகுப்புத் தகைமையிலிருந்து க.பொ.த.சாதாரண தரம், உயர்தரம் என்று வந்து படிப்படியாக மாற்றம் கண்டு ஆசிரிய பதவிக்கு பட்டதாரி தகைமை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகப் பட்டம் தேவைப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவரின் தொகை மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒரு நிலை உலகளாவிய மட்டத்தில் உருவாகியிருக்கின்றது. அரச பல்கலைக்கழகங்களில் தெரிவாகும் அத்தனை மாணவர்களையும் உள்வாங்குவதற்கான வளம் கிடையாது. இதனை யாராலும் மறுத்துரைக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவைப்பாடு முக்கியமானதொன்றாகவே காணப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கு வாய்ப்பளிக்க எவராலும் மறுக்க முடியாது. அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களைத் தொடர்ந்து உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் பெற்றோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகவே உள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர்வதற்கு இடமளிப்பதன் காரணமாக இலவசக் கல்வி பாதிக்கப்படும் என்று கூறுவதற்கில்லை. பாடசாலைக் கல்வித்துறையில் தனியார் ஈடுபடுவதாலும் இலவசக் கல்விமுறை ஒழிந்துவிடப் போவதில்லை. ஒரு போட்டித் தன்மை உருவாகலாம். எந்தப் பாடசாலையில், எந்தப் பல்கலைக்கழகத்தில் பிள்ளையை சேர்ப்பதால் கூடுதல் பலன்கிட்டும் என்ற மனநிலை பெற்றோருக்கு ஏற்படலாம். இதனைக் கூட ஆரோக்கியமாகவே பார்க்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்போது அதன் கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அந்த தகைமை நிர்ணயம் சட்ட ரீதியாக்கப்பட்டு அதனை தனியார்துறையினர் மீறாது செயற்பட சட்டம் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறான அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது தப்பாக முடியாது.
இவற்றுக்கும் மேலாக நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது. கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு முன்னர் அது குறித்து கல்விச் சமூகத்திற்கும் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் ஒட்டுமொத்தமாக பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பெற்றோர்களிடம் இது குறித்து பேசவேண்டும். அதன் பலாபலன்கள் பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டும். அதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்றையுமே செய்யாமல் தன்னிச்சைப் போக்காக முடிவெடுத்து நாம் தீர்மானித்துவிட்டோம். அதனை நீங்கள் ஏற்றுத்தான் தீரவேண்டுமென்ற கொள்கையில் அரசு செயற்பட முனைந்ததால் ஏற்பட்ட எதிர்வினை எவ்வளவு பாரதூரமானதாக, மோசமானதாக அமைந்துவிட்டது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் சந்தேகம் ஆரம்பத்திலேயே களையப்பட்டிருந்தால் இன்று இத்தகைய அவலம் ஏற்பட்டிருக்க முடியாது. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர் மீது தொடர்ந்தும் அம்பெறிந்து கொண்டிராமல் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து அந்த மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யும் வழிவகைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்

-kana-
source;
http://www.thinakkural.com

No comments: