உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியென்பது அவற்றின் இடப்பெயர்ச்சி முலமாகவே சாத்தியமாயிற்று. மனிதகுலத்தின் நாகரீகம் மனிதர்களின் இடப்பெயர்ச்சி மூலமாகத்தான் வளர்ச்சிபெற்றது. தொடக்க காலத்தில் கால்போன போக்கில் இடம்விட்டு இடம் நகர்ந்த மனிதன் அவனது தேவைகளும் அறிவும் வளர்ந்தபோது தன்னுடைய இடப்பெயர்ச்சியை இலகுவாக்குவதற்கான வழிவகைகளைத் தேடத் தொடங்கினான்.
காடுகளிலுள்ள பெருமரங்கள், நீர்நிலைகள், சிற்றோடைகள், பெருநதிகள், மலைகள், பறவை மற்றும் விலங்குகளின் அசைவியக்கங்கள், நட்சத்திரங்கள் எனத் தன்னுடைய நகர்வுகளுக்கும் பயணங்களுக்கும் இயற்கையை நம்பியிருந்த, இயற்கையைப் பயன்படுத்திக்கொண்ட மனிதன் தன்னுடைய அறிவின் திறன்கொண்டு தனக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கிய கருவிதான் இந்த புவிசார் நிலைகாண் தொகுதி (Global Positioning System). பல்வேறு தேவைகளுக்காகப் பல்வேறுபட்ட கருவிகளை உருவாக்கிய மனிதனின் அறிவுக்குழந்தையான இந்த புவிசார் நிலைகாண் தொகுதி மனிதனை அவனது சரியான பயணப்பாதையில் அழைத்துச்செல்கின்றது.
தற்காலப் பயன்பாட்டிலுள்ள நவீன போக்குவரத்து ஊர்திகளில் வழிகாட்டும் தொகுதி (Navigation System) என்பது ஓர் இன்றியமையாத கருவியாகிவிட்டது. நாம் போகவேண்டிய இடத்தின் முகவரியை வழிகாட்டும் கருவியினுள் உள்ளீடு செய்ததும், நாம் பயணிக்கவேண்டிய பாதையினைத் திரையில் தோன்றும் வரைபடத்திற் குறித்துக் காட்டுவதுடன் நமது பயணத்தின்போது வீதியில் எமது நகர்வினையும் தொடர்ந்து குறித்துக்காட்டும் வேலையினையும் இக்கருவி செய்கின்றது. இச்செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அவற்றின் பின்னணி மற்றும் வரலாறு என்பவற்றையும் இங்கு மேலோட்டமாகப் பார்ப்போம்.
GPS என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப் புவிசார் நிலைகாண் தொகுதியானது, வானவெளியில் வலம்வந்துகொண்டிருக்கும் அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான ஒரு தொகுதி செய்மதிகளின் துணையுடன் இயங்குகின்றது. இத்தொகுதியானது புவியிலோ அல்லது புவியை அண்மித்த வான்பரப்பிலோ அமைவிடம் மற்றும் நேரம் போன்ற தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் வழிகாட்டும் செயற்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கருவியானது புவியின் காலநிலை மாற்றங்கள் மற்றும் இரவு பகல் போன்றவற்றால் பாதிக்கப்படாது செயற்படவல்லது.
புவிசார் நிலைகாண் தொகுதியின் செயற்பாடானது பிரதானமாக பின்வரும் மூன்று கட்டமைப்புக்களைக் கொணடிருக்கின்றது.
1. 24 தொடக்கம் 32 வரையிலான வழிகாட்டும் செய்மதிகள் (Navigation Satellites)
2. புவியின் நான்கு அமைவிடங்களில் அமைந்திருக்கும் செய்மதிக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் (Control and monitoring stations)
3. பாவனையாளருக்கு வழிகாட்டும் GPS அலைவாங்கிக் கருவி (GPS receiver)
வழிகாட்டும் செய்மதிகளால் வானவெளியிலிருந்து அலைபரப்பப்படும் மின்காந்தச் சமிக்கைகள் GPS அலைவாங்கியினால் உள்வாங்கப்பட்டு புவிநிலைப் புள்ளியான அகலாங்கு (latitude), நெட்டாங்கு (longitude) மற்றும் கடல்மட்ட உயரம் (altitude) என்பவற்றுடன் நேரமும் (time) கணிப்பிடப்படுகின்றன. 1995 April மாதத்தில் முழுமையான செயற்பாட்டு நிலையை எட்டியபின்னர், இத்அதாகுதியின் பயன்பாடானது உலகில் பரந்துபட்டளவில் விரிவடைந்தது. உலகளாவிய வழிகாட்டும் செயற்பாடடின் பிரதான பாத்திரத்தை இத்தொகுதி பெற்றுக்கொண்டது. அத்துடன் மட்டுமல்லாது வரைபட உருவாக்கம், நில அளவை, வர்த்தகம், விஞ்ஞானச் செயற்பாடுகள், அத்தோடு வாகனம் மற்றும் நபர்களைப் பின்தொடர்தல் போன்ற செயற்பாடுகளிலும் இத்தொகுதி பயன்படுத்தப்படுகின்றது. இத்தொகுதியின் அணுக்கடிகாரத்தின் மூலமான துல்லியமான நேரக்கணிப்பீடானது நிலநடுக்கம் தொடர்பான விஞ்ஞான ஆய்வு மற்றும் கைத்தெலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
தரை, கடல் மற்றும் வான் வழிகாட்டற் செயற்பாட்டில் GPS ஆனது பிரதான கருவியாக இடம்பிடித்துள்ளது. இடர்கால மீட்புப்பணி மற்றும் அவசரகாலப் பணி என்பவற்றில இதன் பங்களிப்பானது அளப்பரியது. GPS கருவியின் துல்லியமான நேரக் கணிப்பீடானது எமது நாளாந்தச் செயற்பாடுகளான வங்கி, கைத்தொலைபேசிச் சேவை மற்றும் மின்னிணைப்பு என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையால் பயன்படுத்தப்பட்ட உலகின் முதலாவது வழிகாட்டற் செய்மதித் தொகுதியானது 1960 ஆம் ஆண்டில் பரீட்சிக்கப்பட்டது. அண்ணளவாக மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அளவில் புவிநிலைப் புள்ளிகளுக்கான (fix) தரவுகளைத் தரவல்ல இந்த வழிகாட்டல் தொகுதி ஐந்து செய்மதிகளைக் கொண்டது. 1967 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Timation எனப் பெயரிடப்பட்ட செய்மதியே முதன்முதலில் விண்வெளியில் - இன்றைய புவிசார் நிலைகாண் தொகுதியில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்திலமைந்த - துல்லியமிக்க நேரக்கணிப்புக் கருவியைக் கொண்டிருந்தது.
1940 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு இரண்டாம் உலகப்போர் காலத்திற் பயன்படுத்தப்பட்ட LORAN மற்றும் Decca Navigator ஆகியவற்றை இவ் வழிகாட்டற் தொகுதியின் முன்னோடியாகக் கொள்ளமுடியும். இவற்றில், புவியில் நிலையாக அமைக்கப்பட்ட நிலையங்களிலிருந்து அலைபரப்பப்பட்ட சமிக்கைகள் பிறிதொரு கருவியினால் உள்வாங்கப்பட்டு அக்கருவியின் அமைவிடம் கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1957 இல் சோவியத் ஒன்றியத்தினால் விண்ணில் செலுத்தப்பட்ட உலகின் முதற் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் (Sputnik), அதன் மின்காந்த அலைகளைக் கண்காணிக்கும் பணியிலீடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றிற்கு செய்மதியினைப் பயன்படுத்திப் புவிசார் நிலைகாண் தொகுதியினை வடிவமைக்கும் எண்ணக்கருவை ஏற்படுத்தியது.
இப்போது GPS அலைவாங்கிக் கருவி ஒன்று எவ்வாறு புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பிடுகின்றது என்பதனைப் பார்ப்போம்.
ஒரு GPS அலைவாங்கியானது விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் வழிகாட்டல் தொகுதிச் செய்மதிகளிலிருந்து (Navigation Satellite) கிடைக்கும் சமிக்கைகளை உள்வாங்கி அச்சமிக்கைகளின் நேரத்தினைக் கணிப்பிடுவதன் மூலம் அமைவிடத்தைக் கண்டறிகின்றது. ஒவ்வொரு வழிகாட்டல் தொகுதிச் செய்மதியிலிருந்தும் அனுப்பப்படும் சமிக்கைகள் பின்வரும் மூன்று தகவல்களை உள்ளடக்கியதாகக் காணப்படும்.
1. செய்மதியிலிருந்து தகவல் அனுப்பப்பட்ட நேரம்
2. செய்மதிச் சுற்றுவடட்டப் பாதையில் செய்மதியின் அமைவிடம்
3. தொகுதியின் செயற்றிறன் மற்றும் தொகுதியிலுள்ள ஏனைய செய்மதிச் சுற்றுவட்டப்பாதையின் அண்ணளவான தகவல்கள்
உள்வாங்கப்படும் சமிக்கையிலுள்ள நேரத் தகவல்களைக் கொண்டு GPS அலைவாங்கியானது குறித்த சமிக்கையை அனுப்பிய செய்மதியின் அமைவிடத்தைக் கணிப்பிடும். இவ்வாறு பல செய்மிதிகளிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளின் மூலம் அச்செய்மதிகளின் அமைவிடத்தைக் கணிப்பிட்டு கிடைக்கும் தரவுகளைக் கேத்திரகணிதக் கணிப்பீட்டுக்கு உட்படுத்துவதன் மூலம் அலைவாங்கியானது அதனது அமைவிடத்தைக் கண்டறிகின்றது. இவ்வாறு கணிப்பிடப்படும் அமைவிடம் எண்களாகவோ அல்லது வரைபடம் ஒன்றின்மீதோ பாவனையாளருக்குக் குறித்துக்காட்டப்படுகின்றது. மேலே சுட்டிக்காட்டப்பட்டது போன்று பொதுவாக புவிநிலைப் புள்ளிகள் புவியின் மேற்பரப்பு அமைவிடத் தகவல்களான அகலாங்கு, நெட்டாங்கு மற்றும் கடல்மட்ட உயரம் என்பவற்றைக் கொண்டிருக்கும். வாகனங்களில் பயணிக்கும்போது GPS அலைவாங்கிகள் பயணிக்கும் வேகத்தினையும் கணிப்பிடவல்லதாக இருக்கும்.
வாகனத்தில் பயணிக்கும்போது புவிநிலைப் புள்ளிகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த வண்ணமிருக்கும். இவ்வாறு புள்ளிகள் மாற்றமடையும்போது இருவேறு புள்ளிகளைக் கணிப்பிடுவதற்கான நேர இடைவெளியை அடிப்படையாகக் கொண்டே அலைவாங்கித் தொகுதியின் வேகம் கணிப்பிடப்படுகின்றது.
GPS இன் முழுமையான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பணிகள் அமெரிக்காவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. யுத்த காலங்களில் தமது இராணுவச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றிக் குறித்த பிரதேசங்களிற்கோ அல்லது முழுமையாகவோ GPS செயற்பாட்டை முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்காவினால் முடியும்.
GPS அலைவாங்கிக் கருவி ஒன்று புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று செய்மதிகளின் சமிக்கைகளை உள்வாங்க வேண்டும். இருப்பினும், மின்காந்த அலைகளின் வேகம் காரணமாக, நேரத் தரவினில் காணப்படும் சிறியதொரு வழுகூட புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பதில் பாரிய வழுவினை ஏற்படுத்திவிடும். இதன்காரணமாக GPS அலைவாங்கிகள் நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட செய்மதிகளிலிருந்து தகவல்களைப் பெற்றே புவிநிலைப் புள்ளிகளைக் கணிப்பிடுகின்றன.
அடிப்படையில் இராணுவப் பயன்பாட்டிற்கென ஊருவாக்கப்பட்ட இந்தப் புவிசார் நிலைகாண் தொகுதியானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இத்தொகுதியின் செயற்பாடானது பரிச்சயமற்ற பிரதேசங்களினூடான நகர்வுகள், மீட்பு நடவடிக்கைள் மற்றும் அதிரடித் தாக்குதல்களிற்கான தரையிறக்கங்கள் போன்றவற்றினை இலகுவாக்கியுள்ளது. அத்தோடு இக்கருவி கட்டளையதிகாரிகளின் மின்னணு உதவியாளர் (Commanders Digital Assistant) என்றோ போர்வீரர்களின் மின்னணு உதவியாளர் (Soldiers Digital Assistant) என்றோ அழைக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி இலக்குக்களைப் பின்தொடர்தல் (Target Tracking), ஏவுகணைகளை வழிநடத்துதல் (Missile Guidance) போன்ற செயற்பாடுகளிலும் இத்தொகுதியின் பங்கு அளப்பரியது.
GPS கருவியின் பொதுமக்கள் பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், வரையறுக்க முடியாதளவுக்கு அதன் பயன்பாடு நாளாந்தம் வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. கண்டுபிடிப்பாளர்களின் கற்பனா சக்திக்கேற்ப புதிய புதிய வசதிகள் நாளாந்தம் GPS கருவியிற் புகுத்தப்பட்டவண்ணமுள்ளன. கைத்தெலைபேசி, ஓளிப்படக் கருவி (Camera), கைக்கடிகாரம் (Watch) மற்றும் உணரிகள் (Sensors) என GPS இன் பயன்பாடு புதிய வடிவங்களிற் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
GPS கருவியின் உதவியுடனான உல்லாசப் பயணம் என்பது பொதுப்பயன்பாட்டில் இக்கருவியின் பயன்பாட்டிற்கான ஓரு சிறந்த உதாரணம். GPS தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனிதர்களால் வழங்கப்பட்டுவந்த உல்லாசப் பயணிகளுக்கான வழைகாட்டும் சேவையினை (Tourist Guide Service) இப்போது ஒரு GPS இன் துணையுடன் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளது. இக்கருவியானது உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டுவதுடன் ஒவ்வொரு பார்க்கப்பட வேண்டிய இடத்தை அடைந்ததும் அவ்விடம் தொடர்பான தகவல்களைப் பயணிகளுக்கு வழங்குகின்றது. மனித அறிவுடன் ஒப்பிடும்போது இவற்றின் பயன்பாடு வரையறுக்கப்பட்டவையாகவே இருக்கின்ற போதிலும், தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி எதையும் சாத்தியமாக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்பது மறுக்கப்படமுடியாதது.
முழுமையான புவிசார் நிலைகாண் மற்றும் வழிகாட்டல் தொகுதி ஒன்று, விண்வெளித் தொகுதி (space Segment), கட்டுப்பாட்டுத் தொகுதி (control segment) மற்றும் பயனர் தொகுதி (user segment) என மூன்று உப தொகுதிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
விண்ணில் வலம்வந்தநண்ணமிருக்கும் 24 வழிகாட்டற் செய்மதிகளைக்கொண்ட தொகுதியே விண்வெளித் தொகுதி என்றழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில், ஒவ்வொன்றிலும் எட்டு செய்மதிகள் மூலம் மூன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றக்கூடியவாறே இந்த இருபத்திநான்கு செய்மதிகளைக் கொண்ட தொகுதி வடிவமைக்கப்பட்டது. பின்வந்த நாட்களில் ஒவ்வொன்றிலும் நான்கு செய்மதிகள்மூலம் ஆறு சுற்றுவட்டப்பாதையில் சுற்றக்கூடியவாறு இத்தொகுதி மாற்றியமைக்கப்பட்டது. புவியின் எப்பகுதியிலிருக்கும் ஒரு GPS அலைவாங்கியானது எப்போதுமே ஆறு செய்மதிகளின் தொடர்பினைக் கொண்டிருக்கக்கூடியவாறு இந்தச் செய்மதிச் சுற்றுவட்டப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அண்ணளவாகப் புவிமேற்பரப்பிலிருந்து 22200 கிலோமீற்றர் உயரத்தில் 26600 கிலோமீற்றர் ஆரையுடைய சுற்றுவட்டப்பாதையில் புவியை மையமாகக்கொண்டு சுற்றிவரும் இச்செய்மதிகள் ஒவ்வொன்றும் புவிநாளொன்றிற்கு (sidereal day – ஒரு புவிநாள் என்பது அண்ணளவாக 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள், 4091 விநாடிகள் ஆகும்) இரண்டு தடவைகள் புவியைச் சுற்றுவதுடன் குறித்த ஒரே புவிமேற்பரப்பிற்கே தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்குகின்றன.
செய்மதிகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் புவியிலமைந்துள்ள நிலையங்களே கட்டுப்பாட்டுத் தொகுதி என்றழைக்கப்படுகின்றன. செய்மதிகளின் சுற்றுவட்டப் பாதைகள் தேசிய புவியியல் முகவர் நிலையத்துடன் (National Geographical-Intelligence Agency) இணைந்து அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான கண்காணிப்பு நிலையங்களால் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பின்மூலம் பெறப்படும் தகவல்கள் அமெரிக்க விமானப்படையின் விண்வெளிக் கட்டளை மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வழிகாட்டற் செய்மதிகளுக்கான கட்டளைகள், தகவல்கள் வழங்கப்படுவதுடன் வழுத்திருத்தச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
செய்மதிகளில் ஏற்படும் பழுதுகள் கண்காணிப்பு நிலையங்களாற் கண்காணிக்கப்பட்டு நிவர்த்திசெய்யப்படுகின்றன. ஒரு செய்மதியின் பழுதுகள் நிவர்த்திசெய்யப்பட முடியாதபோதோ அல்லது அதன் ஆயுட்காலம் முடிவடையும்போதோ அச்செய்மதி அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற்றப்படுவதோடு வேறொரு செய்மதி பிரதியீடான குறித்த சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்படுகின்றது. இவை தவிர்ந்த வேறு காரணங்களுக்காகவும் செய்மதிகள் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்படலாம். சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்மதி “பயன்பாடற்றதாக” அடையாளப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட செய்மதியிலிருந்து கிடைக்கும் சமிக்கையினை GPS அலைவாங்கிக் கருவி கணிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாது புறக்கணித்துவிடும்.
GPS அலைவாங்கிக் கருவியே பயனர் தொகுதி என்றழைக்கப்படுகின்றது. இக்கருவி செய்மதியிலிந்து கிடைக்கும் சமிக்கையை உள்வாங்கி பயனருக்கான தகவல்களை வழங்கும் செயற்பாட்டைச் செய்கின்றது. அக்கருவிகளின் பயனருக்கான தகவல் வெளியீடானது கருவியின் வடிவமைப்பிற்கேற்ப மாறுபட்டுக் காணப்படலாம். அதாவது சில கருவிகள் புவிநிலைப் புள்ளியினை இலக்கங்களாகவும் வேறு சில கருவிகள் புள்ளியினை வரைபடத்திற் குறித்தோ பயனருக்கு வெளியிடலாம். எவ்வாறாயினும் இக்கருவிகளின் உள்ளகக் கணிப்பீட்டுக் செயற்பாடுகள் ஒன்றாகவே காணப்படும்.
இந்தப் புவிசார் நிலைகாண் தொகுதியின் முழுமையான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பணிகள் ஐக்கிய அமெரிக்காவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இத்தொகுதியின் செய்மதிகள் அடிப்படையில் இராணுவ மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கென இருவேறு விதமான சமிக்கைகளை வழங்கவல்லன. யுத்த காலங்களில் தமது இராணுவச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றிக் குறித்த பிரதேசங்களிற்கோ அல்லது முழுமையாகவோ வழிகாட்டற் தொகுதிகளின் செயற்பாட்டை முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்காவினால் முடியும். இதுபோன்ற காரணங்களிற்காக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கெனவும் உலகளாவிய ரீதியிலும் பல்வேறு வழிகாட்டற் தொகுதிகளைப் பரிந்துரைத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட தொகுதிகள் வருமாறு.
• Galileo – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளின் கூட்டமைபில் உருவாக்கப்படும் இத்தொகுதியினை 2013 ஆம் ஆண்டளவில் முழுமையான பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது
• Beidou – சீன மக்கள் குடியரசினால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான தொகுதி
• COMPASS – சீன மக்கள் குடியரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலகளாவிய பயன்பாட்டிற்கான வழிகாட்டும் தொகுதி
• GLONASS - இரஸ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய வழிகாட்டும் தொகுதி
• IRNSS - இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டும் தொகுதி. இத்தொகுதியினை ஆசிய மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியங்களிலும் பயன்படுத்தமுடியும்
• QZSS – ஜப்பான் நாட்டினாற் பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டல் தொகுதி
நன்றி
http://eelanation.com/ariviyal-pakuthi/40-pothu-kalvi/199-gps-introduction.html
No comments:
Post a Comment