மனித குலம் படைத்த சாதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அண்டவெளியெங்கும் சஞ்சரிக்கும் மனிதனால் படைக்கப்பட்டதோர் உயரிய சக்திமிக்க சாதனம். செய்மதிகளின் பயன்பாட்டு எல்லைகள் நாளும் வளர்ந்தவண்ணமுள்ளன. தொலைத்தொடர்பு, விஞ்ஞான ஆய்வு, இராணுவம் எனப் பல்வேறுபட்ட தளங்களில் செய்மதிகளின் பயன்பாடுகள் விரிந்து பரந்து காணப்படுகின்றன. 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண்ணில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-01 (Sputnik-01) என்ற செய்மதியுடன் ஆரம்பமான செய்மதிகளின் வரலாற்றில், இன்றளவில் இப்புவியைச்சூழ, ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமான, ஆயிரக்கணக்கான செய்மதிகள்வரை காணப்படுகின்றன.
பல்வேறுபட்ட தேவைகளுக்கான செய்மதிகள் பயன்பாட்டிலுள்ள போதிலும், இராணுவ உளவு, புவி அவதானிப்பு, தொலைத்தொடர்பு, காலநிலை அவதானிப்பு, ஆய்வு மற்றும் வழிகாட்டல் பயன்பாட்டுக்கான செய்மதிகள் பொதுவானவையாகக் காணப்படுகின்றன. கோள்கள் சூரியனை மையமாகக்கொண்டு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவருவது போன்றே, செய்மதிகள் புவியை மையமாகக் கொண்டு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. செய்மதிகளின் பயன்பாடுகளிற்கேற்ப அச்செய்மதிகள் நிலைநிறுத்தப்படும் சுற்றுவட்டப் பாதைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
உதாரணமாக, தொலைத்தொடர்பு மற்றும் ஒளி ஒலி பரப்பிற்குப் பயன்படுத்தப்படும் செய்மதிகள் புவியின் குறிப்பிட்டதோர் பரப்பை எந்நேரமும் நோக்கியதாக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான பணிகளுக்காக ஏவப்படும் செய்மதிகள் புவிநிலைப்புள்ளிச் சுற்றுவட்டப்பாதையில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படும். இச்சுற்றுவட்டப்பாதை புவி அகலாங்கு 0 (latitude 0 degree) பாகை கோணத்தில் புவி மேற்பரப்பிலிருந்து அண்ணளவாக 36000 கிலோமீற்றர் உயரத்தில் அமைந்திருக்கின்றது.
இராணுவப் பயன்பாடு தவிர்ந்த பொதுப் பயன்பாட்டில் செய்மதிகள் பிரதானமாக மூன்று வகையான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
நிலையான செய்மதிச் சேவைகள் (Fixed Satellite Service) - புவியின் நிலையான அமைவிடங்களுக்கு இடையிலான தொலைத்தொடர்புப் பயன்பாட்டிற்கான செய்மதிச் சேவைகள்.
நகரும் செய்மதிச் சேவைகள் (Mobile Satellite Service) - கப்பல்கள், விமானங்கள் போன்ற நகரும் நிலைகளுக்கான வழிகாட்டல் மற்றும் தொலைத்தொடர்புப் பயன்பாட்டிற்கான செய்மதிச் சேவைகள்.
விஞ்ஞான ஆய்வுச் செய்மதிகள் (Scientific Research Satellite) - புவியில் கனிமவள ஆய்வு, கடல்வள ஆய்வு, நில அளவை போன்ற பல்வேறுபட்ட ஆய்வுப்பணிகளில் செய்மதிகளின் பயன்பாடு பரந்துபட்டுக் காணப்படுகின்றது.
இது தவிர, செய்மதிகள் அவற்றின் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
செய்மதி எதிர்ப்பு ஆயுதங்கள் - இவ்வகைச் செய்மதிகள் எதிரி நாடுகளின் செய்மதிகள், போர்த்தளபாடங்கள், ஏவுகணைகளைத் தாக்கியளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்
விண்வெளி ஆய்வுச் செய்மதி - இவ்வகைச் செய்திகள் விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், பிற கோள்கள் போன்றவற்றை ஆய்வுசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டவை.
உயிரியலாய்வுச்செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் உயிரிகளை (living organism) விண்வெளிக்குக் கொண்டுசென்று ஆய்வுசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டன.
தொலைத்தொடர்புச் செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் தொலைத்தொடர்பு, ஒலி ஒளி பரப்புச் சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.
வழிகாட்டல் செய்மதி - புவியில் வழிகாட்டும் செயற்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டவை.
புவி அவதானிப்புச் செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் செய்மதிகளின் சொந்த நாடுகளின் புலநாய்வு அமைப்புக்களால் ஏனைய நாடுகளை வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செய்மதிகளின் செயற்றிறன் பெரும்பாலும் வெளித்தெரியாதவையாகவே இருக்கின்றன.
விண்வெளி நிலையம் - மனிதர்கள் விண்வெளியில் சென்று தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விண்வெளி ஆய்வுகூடங்களாகும்.
காலநிலை அவதானிப்புச் செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் காலநிலை அவதானிப்புப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட செய்மதிகளாகும்.
செய்மதிகளின் சுற்றுவட்டப் பாதைகள் பிரதானமாக மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
தாழ்நிலைச் சுற்றுவட்டப்பாதை (Low Earth Orbit)
இடைநிலைச் சுற்றுவட்டப்பாதை (Medium Earth Orbit)
உயர்நிலைச் சுற்றுவட்டப்பாதை (High Earth Orbit)
புவிமேற்பரப்பிலிருந்து 2000 கிலோமீற்றருக்குக் உட்பட்ட சுற்றுவட்டப்பாதைகள் தாழ்நிலைச் சுற்றுவட்டப்பாதை எனவும், 2000 கிலோமீற்றர் தொடக்கம் 35786 கிலோமீற்றர் வரையான சுற்றுவட்டப் பாதைகள் இடைநிலைச் சுற்றுவட்டப்பாதைகள் எனவும், 35786 கிலோமீற்றருக்கு மேற்பட்ட சுற்றுவட்டப்பாதைகள் உயர்நிலைச் சுற்றுவட்டப் பாதைகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. தொலைத்தொடர்புச் செய்மதிகள் நிலைநிறுத்தப்படும் 35786 கிலோமீற்றர் உயரத்திலுள்ள சுற்றுவட்டப்பாதை புவிநிலைச் சுற்றுவட்டப்பாதை (geocentric orbit) எனச் சிறப்பாக அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment