Wednesday, January 13, 2010

அதிக நேரம் டிவி பார்ப்பதால் இதய நோய் வரும் அபாயம்


 அதிகநேரம் தொலைக்காட்சி (டிவி) பார்த்துக் கொண்டிருந்தால் இதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தொலைக்காட்சியை, அவர்கள் பாதிப்புகளை உருவாக்கும் முட்டாள் பெட்டி எனவும் குறை கூறினர்.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் சர்வதேச படிப்புக்காக தொலைக்காட்சி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

தற்போது 80 சதவீதத்துக்கும் மேலானோர் நாள்தோறும் 4 மணி நேரத்திற்கு குறையாமல் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள். இது தவறான செயலாகும். ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு குறைவான நேரம் தொலைக்காட்சிகளை பார்த்தால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தப்பிக்க முடியும்.

தொலைக்காட்சிகள் மட்டுமின்றி கண்களை கூர்ந்து பார்வையிடச் செய்து கார்களை இயக்குவது, கணினி முன்பு அமர்ந்திருப்பது போன்றவையும் உடல் நலத்திற்கு கேடானது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக மொத்தம் 8,800 பேர் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் அளவு மற்றும் உடல்நிலைக் குறித்து பதிவு செய்யப்பட்டு வந்தது என்றார் அவர்.

தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு அதிகநேரம் ஒதுக்குவதால் உடலில் கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து கோளாறுகள் ஏற்படுகின்றன.

ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டவர்களில் 284 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 87 பேர் இதய நோயாளும், 125 பேர் புற்றுநோயாலும் இறந்தனர்.

அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதால் இதயநோய்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அமெரிக்க இதயக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.

No comments: